● சாந்தி சுந்தரம், சென்னை-12.
எங்கள் குடும்பமே "பாலஜோதிட'த் துக்கும், உங்கள் கேள்வி- பதிலுக்கும் விசிறி. என் சகோதரிக்கு ஆறு மாதம் முன்பு, இட விற்பனை சம்பந்தமாக கேள்வி கேட்டதற்கு, ஜனவரிக்குள் விற்பனையாகும் என்று துல்லியமாகக் கணித்துச் சொன்னீர்கள். ஆகஸ்டு மாதமே நல்லபடியாக விற்பனையாகிவிட்டது. அநேக கோடி நன்றிகள்! இத்துடன் என் மகன்- மருமகள் ஜாதகம் அனுப்பியுள்ளேன். என் மகனுக்கு ஒரு வருடம் முன்பு "கோமா' ஏற்பட்டு, முறை யான சிகிச்சைக்குப்பிறகு குணமாகி விட்டது. மறுபடியும் வராமலிருக்க கடவுளைப் பிரார்த்தித்து, 21 வைதீ கர்களை வைத்து மிருத்யுஞ்சய ஹோமமும் செய்து, குலதெய்வ வழிபாடும் செய்துவிட்டோம். அவன் மேற்கொண்டு நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியமாகவும் இருக்க வேறு என்ன செய்ய வேண்டும்? எனக்கு 70 வயதாகிவிட்டது. அவன் கவலைதான்!
மகன் வெங்கடேஷ் சிம்ம லக்னம், துலா ராசி, சித்திரை நட்சத்திரம். சனி தசை, புதன் புக்தி. மருமகள் சுஜாதா புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசி, கன்னி லக்னம். புதன் தசை, தனது புக்தி- 2020 வரை. அவர்கள் வெளிநாட்டிலேயே இருக்கட்டும். அதன்பிறகு மருமகளுக்கு அட்டமச்சனி வந்தபிறகு இந்தியா வந்து செட்டிலாகலாம். நீங்கள் செய்த ஹோமமே போதுமானது. என்னதான் வைத்தியம் பார்த்தாலும், மருந்து மாத்திரை சாப்பிட்டாலும், இறைவழிபாடும் பரிகாரமும் இருந்தால்தான் முழுப்பலன் கிடைக்கும். அதனால்தான் அவ்வப்போது வாசகர்களுக்குப் பரிகாரமும், ஆலய வழிபாடும் ஆலோசனை எழுதுகிறேன். திண்டுக்கல் அருகில் தாடிக்கொம்பு என்ற ஊரில் சௌந்திரராஜப் பெருமாள் கோவிலில் தன்வந்தரிக்கு தனிச்சந்நிதி உண்டு. அங்கு வெங்கடேஷ் ஜென்ம நட்சத்திரத்தன்று (சித்திரை) ஒருமுறை அபிஷேக பூஜை செய்யவும். 2020-ல் அவர்கள் இந்தியா வந்தபிறகு காரைக் குடியில் தன்வந்திரி, நவகிரகம், ஆயுஷ் ஹோமம் உள்பட 19 வகை ஹோமம் செய்து, சுஜாதா உள்பட குடும்பத்தாருக்கு கலச அபிஷேகம் செய்துகொள்ளலாம்.
● திருமதி தனம், கோவை-38.
ஜோதிட ஆர்வத்தால் தங்களின் ராசி பலன்- கேள்வி- பதில்களைப் படித்து திருப்தியடைகிறேன். ஜோதிடத்தைப் பாடமாக எடுத்துப் படித்துள்ளேன். ஜோதிடத்தைத் தொழிலாக எடுத்துச் செய்யலாமா? எப்போது ஆரம் பிக்கலாம்? ஜோதிடப் பிதாமகரான தங்களின் ஆசிவேண்டுகிறேன்.
கன்னியா லக்னம். 2-ல் செவ்வாய், கேது. அவர்களுக்கு ராகு பார்வை. தனுசு ராசி, பூராட நட்சத்திரம். குரு 11-ல் உச்சம். குருவும் சந்திரனும் பரிவர்த்தனை. இதுவே உங்களை பிரபலமான ஜோதிடராக்கிவிடும். மேலும் நடப்பு குரு தசை! தை மாதம் உங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்றே ஆரம்பிக்கலாம். அன்று ஈச்சனாரி விநாயகரையும்- சூலூர் அருகில் சரசுவதிûயும் வழிபடவும். ஏழரைச்சனிக்குப் பரிகாரமாக 54 மிளகை ஒரு சிவப்புத் துணியில் பொட்டலம் கட்டி சனிக்கிழமைதோறும் காலபைரவர் சந்நிதியில் நெய்யில் பொட்டலத்தை நனைத்து தீபமேற்றி வழிபடவும்- ஏழரைச்சனி முடியும்வரை.
● கே.ஜி. சந்திரன், கோவை-7.
என் மகன் பணிபுரிந்த கம்பெனியை நஷ்டத்தினால் மூடிவிட்டார்கள். இரண்டு வருடமாக நல்ல வேலையும் இல்லை. பி.காம்.(சி.ஏ.) படித்துள்ளார். ஆடிட்டிங் ஆபீசில் சேர்த்துவிடலாமா? முப்பது வயதாகிறது. திருமணம் எப்போது நடைபெறும்?
மகன் கிருஷ்ணன் மிருகசீரிட நட்சத்திரம், மிதுன ராசி, மேஷ லக்னம். 2006 மே முதல் குரு தசை ஆரம்பம். அதில் 2019 ஜனவரி வரை சந்திரபுக்தி. தசாநாதன் குருவும் 12-ல் (மீனத்தில்) மறைவு. புக்திநாதன் சந்திரனும் 3-ல் (மிதுனத்தில்) மறைவு. அடுத்து வரும் செவ்வாய் புக்தி லக்னத்தில் ஆட்சி. அப் போது நல்ல ஆடிட்டிங் கம்பெனியில் சேர்த்துவிடலாம். சம்பளம் கூடுதலோ குறைவோ கவலைப்பட வேண்டாம். கோட்சார குரு விருச்சிகத்திலிருந்து தனுசுக்கு மாறியதும் உயர்வு உண்டாகும். 8-ல் சனி- அதற்கு செவ்வாய் பார்வை இருப்பதால், திருமணம் தாமதமாக லாம். பிரச்சினைகள் ஏற்படலாம். அதனால் காரைக்குடியில் சுந்தரம் குருக் களிடம் காமோகர்ஷண ஹோமம், கந்தர்வ ராஜ ஹோமம் உள்பட 19 வகை ஹோமம் செய்து கலசஅபிஷேகம் செய்து கொள்ளவும். நல்ல வேலை- நல்ல சம்பாத்தியம்- நல்ல மனைவி- நல்ல மணவாழ்க்கை அமைய இதைச் செய்ய வேண்டும். (செல்: 99942 74067-ல் தொடர்புகொண்டு விசாரிக்கலாம்.)
● ஏ. குப்புசாமி, சென்னை-78.
புதன் தசை அந்திம தசை என்றும், ஏழரைச்சனியும் 3-ஆவது சுற்றம் என்றும், சிவனுக்கு ருத்ராபிஷேக பூஜை செய்யும்படி குறிப்பிட்டிருந்தீர்கள். அதை காளஹஸ்தியில் செய்வதா? அல்லது சென்னையில் உள்ள கோவில்களில் செய்வதா?
மற்ற கோவில்களில் ருத்ராபிஷேகம் செய்ய அதிக செலவாகும்! காளஹஸ் தியில் குறைவான செலவுதான். மேலும் தற்போது கடக லக்னத்தில் ராகு இருப் பதால் காளஹஸ்தியில் ருத்ராபிஷேகம் செய்வது சிறப்பு.
● ஆர். யமுனேஸ்வரி, சென்னை.
எனது மகள் யோகேஸ்வரிக்கு 2013-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. பல பிரச்சினைகளால் அது விவாகரத் தாகிவிட்டது. இப்போது 2017 ஜனவரி முதல் மறுமணத்துக்கு முயற்சி நடக்கிறது. எதுவும் அமையவில்லை. எப்போது மறுமணம்?
யோகேஸ்வரி மூல நட்சத்திரம், தனுசு ராசி, கடக லக்னம். நாகதோஷமும் சனி தோஷமும் இருப்பதால், ஜாதகிக்கு 30 வயது முடிந்து திருமணம் செய்ய வேண்டும் என்பது ஜோதிட விதி. ஆனால் 22 வயதில் நடந்துவிட்டது. அதனால் வாழ்க்கை முறிந்துவிட்டது. வருகிற ஆடியில் (ஆகஸ்டு) முப்பது வயது முடியும். அதன்பிறகு மறுமணம் நடக்கும். வரும் கணவருக்கும் அது மறுமண மாக இருக்கும். முன்னதாக வரும் தை மாதம் (2019 ஜனவரி முதல் ஆகஸ்டுக்குள்) காரைக்குடியில் பிரசன்ன விநாயகர் ஆசிரமத்தில் காமோகர்ஷண ஹோமமும், பார்வதி சுயம்வரகலா ஹோமமும் புனர் விவாக மந்திர ஜெபம் செய்து மகளுக்கு கலச அபிஷேகம் செய்யவேண்டும். சுந்தரம் குருக்கள், செல்: 99942 74067-ல் விசாரிக் கவும்.
● கே. குருசாமி, எஸ்.வி. மில் போஸ்ட்.
எனக்கு எப்போது திருமணம்?
43 வயது நடக்கிறது. கடுமையான களஸ்திர தோஷமும், புத்திர தோஷமும் இருப்பதால் திருமணம் ஆகுமா என்பதே கேள்விக்குறிதான். மேலும் குரு 8-ல் மறைவு. குருபலம் இல்லை. பரணி நட்சத்திரம், மேஷ ராசி. அட்டமத்துச்சனி 2020 வரை நடக்கும். மாசியில் ராகு- கேது பெயர்ச்சிக்குப் பிறகு பெண் அமையலாம். அதற்குள் காரைக்குடியில் சுந்தரம் குருக்களிடம் காமோகர்ஷண ஹோமமும், கந்தர்வ ராஜஹோமமும், சூலினிதுர்க்கா ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும். (தொடர்புக்கு: செல்: 99942 74067). நவகிரக ஹோமம், சனி சாந்தி ஹோமம், மிருத்யுஞ்சய, ஆயுஷ் ஹோமம் உள்பட 19 வகையான ஹோமம் செய்வார்கள்.
______________
சந்திராஷ்டம தினங்கள்
மீனம்: 30-12-2018 இரவு 1.00 மணிமுதல் 2-1-2019 காலை 6.30 மணிவரை சந்திராஷ்டமம். பொருளாதாரத்தில் சற்று சிக்கல்களை சந்திக்கலாம். உடல்நிலையில் சிறுசிறு தொந்தரவுகளும், வைத்தியச் செலவுகளும் நேரலாம். தேவையற்ற மனஉளைச்சல் ஏற்படலாம். என்றாலும் உங்களது மனோதைரியத்தாலும், தெய்வ வழிபாட்டாலும் அவற்றை சமாளிக்கும் சக்தியும், ஆற்றலும் உருவாகும். உடன்பிறந்தவகையில் மனவருத்தம், பகை போன்றவற்றை சந்திக்கநேரும். தட்சிணாமூர்த்தியையும் துர்க்கையையும் வழிபடவும்.
மேஷம்: 2-1-2019 காலை 6.30 மணிமுதல் 4-1-2019 பகல் 2.30 மணிவரை சந்திராஷ்டமம். அலுவலகத்தில் பணிபுரிபவர்களிடையே சங்கடங்கள் உண்டாகலாம். அவர்களின் பொறாமையையும் போட்டியையும் காணநேரும். எனினும் மேலதிகாரிகளின் ஆதரவு இருப்பதால், அவற்றை எதிர்கொண்டு வெற்றிபெறலாம். மனதில் இனம்புரியாத கவலை ஏற்படலாம். எதிர்காலம் பற்றிய சிந்தனையையும் உருவாக்கும். கவலைகொள்ள வேண்டிய அவசியமில்லை. மௌனத்துடன் பொறுமை காக்கவும். விநாயகர் கவசம் பாராயணம் செய்யவும்.
ரிஷபம்: 4-1-2019 பகல் 2.30 மணிமுதல் 6-1-2019 இரவு 11.45 மணிவரை சந்திராஷ்டமம். நினைத்த காரியத்தை நிறைவேற்றும் வாய்ப்புகள் உருவாகும். கற்பனை பயம் ஒருபுறம் இருக்கும். தந்தையால் அனுகூலமான பலன் ஒன்று கைகூடும். நண்பர்களிடையே சங்கடங்களும் சஞ்சலமும் தோன்றும். பழகியவர்களிடையே வெறுப்புகளைக் காணலாம். அமைதி காப்பது அவசியமான ஒன்றாகும். சக்கரத்தாழ்வாரை வழிபடவும்.